திருச்சி,
திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 16843) வருகிற 30-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (மே) 1, 2, 4 5-ந் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரெயிலானது திருச்சி-எழமனூர் வரை மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலானது முன்பதி வில்லா சிறப்பு ரெயிலாக எழமனூரில் இருந்து பாலக்காடு செல்லும். இந்த ரெயில் அடுத்த மாதம் 2, 4 மற்றும் 5-ந் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சி-முத்தரசநல்லூர் வரை மட்டும் இயங்கும். முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக முத்தரசநல்லூரில் இருந்து பாலக்காடு வரை இந்த ரெயில் செல்லும்.
ரெயில்களின் சேவையில் மாற்றம்
இதேபோல் மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் ரோடு- அம்பாதுரை இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16848) அடுத்த மாதம் 3, 4, 5, 8 மற்றும் 9-ந் தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்துசெல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி- ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 17070) அடுத்த மாதம் 8-ந்தேதி மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.