சென்னை,
தமிழக பா.ஜ.க. மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பவர், அலிஷா அப்துல்லா. இவர், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனும் ஆவார். இவர், 'யூடியூபர்' முக்தார், திருச்சி சூர்யா ஆகிய 2 பேர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கண்ணீர்மல்க புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அலிஷா அப்துல்லா கூறுகையில், “நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தேன். அப்போது முக்தாரும், திருச்சி சூர்யாவும் என்னை பற்றி அவதூறாக பேசினார்கள். குரைக்கும் நாய் கடிக்காது என்பதுபோல் நான் விட்டுவிட்டேன். ஆனால் கடந்த 12 நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை அவர்கள் வெளியிட்டனர். அதில் எனக்கு பிறந்த 2 இரட்டை குழந்தைகள் பற்றி பேசினார்கள்.
ஒரு குழந்தை என்னுடைய முகத்தில் இருப்பது போன்றும், இன்னொரு குழந்தை அண்ணாமலை மாதிரி இருப்பதும் போன்றும் புகைப்படத்தை வைத்து பதிவிட்டனர். இதை நான் விடமாட்டேன். அவர்கள் 2 பேரையும் செருப்பால் அடிக்க வேண்டும். அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்றால் நானே வேறு மாதிரி ஆக்ஷன் எடுப்பேன். முக்தார் சமீபத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உள்ளார்.
அப்போது அவருக்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். எனவே இந்த விவகாரத்தில் தற்போதைய த.வெ.க. அரசாங்கம் முக்தார் மீதும், திருச்சி சூர்யா மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் 10 நிமிடம் பேசி இருக்கிறேன். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்” என்று அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் ஆபாசமாகவும், தன் குழந்தைகளை அவதூறாகவும் விமர்சித்ததாக பா.ஜ.க. பிரமுகர் அலிஷா அப்துல்லா கொடுத்த புகாரில் திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி சூர்யா மீது நேற்று புகார் அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.