தமிழக செய்திகள்

மும்மொழி கல்வி கொள்கை : அரசின் நிலை குறித்து நாளை மறுநாள் முதலமைச்சர் அறிவிப்பார் - செங்கோட்டையன்

மும்மொழி கல்வி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் நாளை மறுநாள் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. 1 லட்சத்து 53 ஆயிரத்து 359 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க அரசு ஆணை வெளியிட்டது.

கடந்த 2016-17, 2017-18 மற்றும் 2018 19 ல் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும். 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதவுள்ளார்.

மும்மொழி கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார். பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வருவது குறித்தும் முதலமைச்சர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.