நயினார் நாகேந்திரன் 
தமிழக செய்திகள்

திரிபுரா உள்ளாட்சி தேர்தல்: 77 இடங்களில் பாஜக போட்டியின்றி அபார வெற்றி! - நயினார் நாகேந்திரன் பெருமிதம்

காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களைக்கூடக் களமிறக்கத் திராணியின்றித் தேர்தலுக்கு முன்பே சரணடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

மொத்தமுள்ள 345 வார்டுகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே 77 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

77 இடங்களில் போட்டியின்றி வெற்றி

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் தேர்தலுக்கு முன்பே ஓடியொளிந்த காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள்: 77 இடங்களில் பாஜக போட்டியின்றி அபார வெற்றி

திரிபுராவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள 345 வார்டுகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே 77 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசும், திரிபுரா மாநில பாஜக அரசும் இணைந்து வழங்கிய ‘டபுள் என்ஜின்’ நல்லாட்சியின் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத ஆதரவைக் கண்டு, எதிர்த்து நின்றால் படுதோல்வி நிச்சயம் என்ற பயத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களைக்கூடக் களமிறக்கத் திராணியின்றித் தேர்தலுக்கு முன்பே சரணடைந்துவிட்டன.

மனமார்ந்த வாழ்த்துகள்

தேர்தலில் தோற்கும்போதெல்லாம் வாக்கு இயந்திரங்கள் (EVM) மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் பழிபோடும் ராகுல் காந்தி, வாக்குப்பதிவே நடைபெறாமல், வாக்கு இயந்திரங்களே பயன்படுத்தப்படாத நிலையில் 77 இடங்களில் மாற்று வேட்பாளரைக் கூட நிறுத்த முடியாமல் போனதற்கு இப்போது என்ன காரணம் சொல்லப் போகிறாரோ?

போட்டியின்றி வெற்றிபெற்ற 77 பாஜக வேட்பாளர்களுக்கும், திரிபுரா மாநில பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் நவம்பர் 27 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மீதமுள்ள 268 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி இமாலய வெற்றி பெற்று, மக்கள் விரோத எதிர்க்கட்சிகளை முழுமையாகத் துடைத்தெறியும் என்பது உறுதி!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT