தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும், நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், கண்டெய்னர் லாரி டிரைவர் படுகாயமடைந்தார்.
சென்னையிலிருந்து கார் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று தூத்துக்குடி குறுக்குச்சாலையில் உள்ள கிடங்கிற்கு வந்தது. அங்கு லோடை இறக்கிவிட்டு, மீண்டும் தூத்துக்குடி நோக்கி நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. லாரியை சென்னை சத்தியமூர்த்திநகரைச் சேர்ந்த போர்ராஜ் (வயது 45) என்பவர் ஓட்டிச் சென்றார்.
வாலசமுத்திரம் அருகே லாரி வந்தபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு மறுபுறம் பாய்ந்தது. அப்போது அந்த லாரி தூத்துக்குடியிலிருந்து திருச்சி நோக்கி நிலக்கரி ஏற்றி வந்த மற்றொரு லாரியின் மீது பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் இரண்டு லாரிகளும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தன. இதில் கண்டெய்னர் லாரி டிரைவர் போர்ராஜ் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்தார். நிலக்கரி லாரியை ஓட்டி வந்த ஓட்டப்பிடாரம் இந்திராநகரைச் சேர்ந்த மாரிச்செல்வம்(28) அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்த போர்ராஜை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.