வேலூர்,
ராணிப்பேட்டை தொகுதியில் முதலில் அமைச்சர் காந்திக்கு தி.மு.க.வில் சீட் மறுக்கப்பட்டது. இதையடுத்து காந்தியின் மகன் வினோத்காந்தி, ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் தனது தந்தை ஆர்.காந்தி மீண்டும் போட்டியிடுவார். தான் இதிலிருந்து விலகிக்கொள்வதாக வினோத்காந்தி கூறி அறிக்கை வெளியிட்டார். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தொழில்வளம் மிக்க ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க. சார்பில் அமைச்சர் காந்தி - அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் வி.எம். கார்த்திகேயன், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தாஹிராவும், நாம் தமிழர் கட்சி சார்பில் தாரிக்கா சல்மான் உள்பட 15 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் காந்தி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கருத்து கணிப்புகளும் தி.மு.க. வெற்றி பெறும் என்று தான் கூறியது. இந்த நிலையில் நேற்று காலை வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில், ஆரம்ப சுற்றுகளில் த.வெ.க.வேட்பாளர். தாஹிரா முன்னிலை பெற்று வந்தார். அதன் பிறகு தி.மு.க வேட்பாளர் காந்தி பல சுற்றுகளில் முன்னிலையில் இருந்தார். ஆனால் கடைசி சுற்றுகள் தலைகீழாக மாறியது. அந்த சுற்றுகளில் த.வெ.சு. வேட்பாளர் தாஹிரா முன்னிலையில் வந்தார். முடிவில் தாஹிரா வெற்றி பெற்றார். காந்தி இதுவரை 7 தேர்தல்களில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார். 3 தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளார்.