தமிழக செய்திகள்

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்

தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த கே.ராஜன் 'பிரம்மச்சாரிகள்' (1983) என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமாவில் களம் புகுந்தார். 'டபுள்ஸ்', 'அவள் பாவம்', 'நினைக்காத நாளில்லை' போன்ற படங்களையும் தயாரித்தார். 'நம்ம ஊரு மாரியம்மா', 'உணர்ச்சிகள்' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். 'சொந்தக்காரன்', 'உளவுத்துறை', 'கபடி கபடி', 'வீட்டோட மாப்பிள்ளை', 'கிரிவலம்', 'ஆதிக்கம்', 'சாரி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு', 'பாம்பு சட்டை', 'துணிவு', 'பகாசுரன்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓரிரு ஆண்டுகள் அவர் படங்கள் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் கூட அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பேஸ்மேக்கர் கருவியும் பொருத்தப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராகவும், செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். சினிமா, அரசியல் தாண்டி சமுதாயம் சார்ந்த சில அமைப்புகளையும் நிறுவி அவர் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நேற்று மாலை தனது கார் டிரைவருடன் அடையாறு நோக்கி சென்றார். அடையாறு மேம்பாலம் அருகே கார் சென்றபோது, டிரைவரிடம் காரை நிறுத்த சொன்ன கே.ராஜன், அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்று திடீரென அடையாறு மேம்பாலத்தில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு திரையிலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.