கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பது தவெக அரசின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது - டிடிவி தினகரன்

ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்த முயலும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களைச் செய்திகளாக வெளியிட்டதற்காகவே குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகளும் அரசு கேபிளில் முடக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை முடக்க நினைப்பதும், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.

ஜனநாயகத்தில் விமர்சனங்களையும், மாற்றுக் கருத்துக்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவமே நல்லாட்சிக்கான அடையாளம் என்பதை இனியாவது உணர்ந்து ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்த முயலும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.