ஈரோடு,
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தொடர்ந்து விலகி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.பாஸ்கர் உள்பட 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் சேர்ந்து உள்ளனர்.
இதற்கிடையே, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் எனும் குரல்களும் எழுந்து வருகின்றன.
குறிப்பாக நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தஞ்சை மாவட்ட, கும்பகோணம் பகுதிச் செயலாளர் பத்ம குமரேசன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஒரு சில ஆட்சி மாற்றங்கள் வரும்போது அதிமுக நிர்வாகிகள் கட்சி மாறுவது என்பது வழக்கமாக நடப்பதுதான். ஆட்சி கலைப்பின்போது, நாஞ்சில், சுப்புலட்சுமி உள்ளிட்டோர் வெளியேறினார்கள். ஆனால், தொண்டர்களும், பொறுப்பாளர்களும் கட்சி மாறுவதில்லை. தாங்கள் செய்த தவறுகளில் இருந்து காத்துக்கொள்ளவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், சொத்துகளை காப்பாற்றிக் கொள்ளவுமே முன்னாள் அமைச்சர்கள்தான் ஆளும் கட்சிக்கு செல்கின்றனர்.
அதிமுக – திமுக கூட்டணி பேசியது அதனால், வெளியேறி தவெகவில் இணைந்தோம் என சொல்பவர்களால் அதனை நிரூபிக்க முடியுமா? அவர்களுக்கு வேறு காரணங்கள் இல்லாததால் இதனை காரணமாக சொல்கிறார்கள்.
யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அனைவரும் ஒன்றிணையப்போகிறோம். ஆனால் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் இவ்வாறு கூறி இருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.