தமிழக செய்திகள்

அரசு கட்டிடத்தில் தலைக்கு மேல் தொங்கிய டியூப் லைட், உடைந்து கிடந்த சுவிட்ச் போர்டு - அதிகாரிகளை கடிந்து கொண்ட லயோலா மணி

கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டால் உங்கள் வேலை முடிந்தது என்று நினைக்காதீர்கள் என அதிகாரிகளிடம் லயோலா மணி தெரிவித்தார்.

வேலூர்,

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக த.வெ.க. நிர்வாகி லயோலா மணி கடந்த மாதம் நியமனம் செய்யட்டார். முன்னதாக கடந்த தி.மு.க. ஆட்சியில் பட்டிமன்ற நடுவரும், தி.மு.க. நிர்வாகியுமான திண்டுக்கல் லியோனி இந்த பொறுப்பில் இருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமனம் செய்யப்பட்ட லயோலா மணி, பாடநூல் கழகத்தின் குடோன்கள், அலுவலகங்களில் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக குடோனில் லயோலா மணி ஆய்வு மேற்கொண்டார்.

அந்த கட்டிடத்திற்குள் அவர் உள்ளே நுழையும்போது வாசலில் ஒரு பெரிய கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்ததை கண்டார். அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, படிக்கட்டு கட்டுவதற்கு பதிலாக கல் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அந்த பாதையைத்தான் தினமும் பயன்படுத்தி வருவதாக அவர்கள் கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியான லயோலா மணி, “இப்படி கல் வைப்பதற்கு பதிலாக ஒரு படிக்கட்டு கட்டலாமே? இதில் யாராவது தவறி விழுந்தால் என்ன செய்வது?” என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார். பின்னர் கட்டிடத்திற்குள் நுழைந்த அவர், அங்கு தலைக்கு மேல் டியூப் லைட் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சியானார். அதுமட்டுமின்றி, அங்கு சுவற்றில் இருந்த சுவிட்ச் போர்டு உடைந்து ஆபத்தான முறையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்தைப் பார்த்து, அதிகாரிகளிடம் லயோலா மணி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

பின்னர் உடனடியாக தனது செல்போனில் மின்வாரிய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசிய லயோலா மணி, “கடைசியாக எப்போது இங்கு வந்து பார்த்தீர்கள்? இங்கு டியூப் லைட், சுவிட்ச் போர்டு எல்லாம் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. நாளை ஆட்களை அனுப்பி இதை சரிசெய்து கொடுங்கள்” என்று கூறினார்.

இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகளிடம் பேசிய லயோலா மணி, “ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டால் உங்கள் வேலை முடிந்தது என்று நினைக்காதீர்கள். திடீரென்று இங்கு அமைச்சர் ஆய்வுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? என்னிடம்தான் கேள்வி கேட்பார்கள்” என்று கடிந்து கொண்டார்.