ஈரோடு,
தமிழகத்தில் மஞ்சள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.20,000-ஆக இருந்த ஒரு குவிண்டால் மஞ்சள் விலை, தற்போதுரூ.23,000 வரை உயர்ந்து விவசாயிகளிடையே பெரும் வியப்பையும், வர்த்தகர்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15,000-க்கு விற்பனையான நிலையில், அடுத்த சில வாரங்களிலேயே இந்த அதிரடி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மஞ்சள் உற்பத்தியில் முக்கிய மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவமழை பொய்த்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. போதிய மழையின்மை காரணமாக மஞ்சள் சாகுபடி பரப்பு இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டால் நடப்பு சீசனில் மஞ்சள் மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த ஆண்டில் சந்தைக்கு வரும் மஞ்சளின் வரத்து பெருமளவில் குறையும் என அஞ்சப்படுகிறது. இந்த பற்றாக்குறை அச்சம் காரணமாக சந்தையில் மஞ்சளுக்கான போட்டி அதிகரித்து, விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் உள்நாட்டுத்தேவை மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் காரணமாக, மஞ்சளின் விலை வரும் நாட்களிலும் மேலும் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.