ஈரோடு,
தேவை அதிகரிப்பு, வரத்து குறைவு மற்றும் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு குவிண்டால் மஞ்சள் விலை ரூ.1,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஈரோட்டில் கடந்த அக்டோபர் 9-ந்தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.19,851-க்கு விற்பனையானது. தொடர்ந்து அக்டோபர் 13-ந்தேதி ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தொடர் பண்டிகைகள் காரணமாக மஞ்சளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் நேற்று ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் செம்மாம்பாளையத்தில் மஞ்சள் விலை உயர்ந்து காணப்பட்டது.
இதில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் குறைந்தபட்சம் ரூ.16,599 முதல் அதிகபட்சம் ரூ.24,211 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.15,600 முதல் ரூ.21,577 வரையிலும் விற்பனையானது.
மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.