தமிழக செய்திகள்

தூத்துக்குடி: விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 1,600 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்

தூத்துக்குடியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 1,600 லிட்டர் கலப்பட பாலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை ஆவின் நிறுவனம், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், காவல்துறையினர், தொழிலாளர் நலத்துறை இணைந்து புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வினியோகத்திற்காக கொண்டு செல்லப்படும் பாலை நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த அதிரடி சோதனையில் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பால் வாகனங்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சில கேன்களில் பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் 600 லிட்டர் பாலும், பழைய பஸ் நிலையம் அருகே 800 லிட்டர் பாலும், டூவிபுரம் பகுதியில் சுமார் 200 லிட்டர் பாலும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் கூறுகையில், பொதுமக்கள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய வகையில் பால் கலப்படம் செய்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும்.

தூத்துக்குடி மட்டுமின்றி கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்படும் பால் தொடர்ந்து சோதனை செய்யப்படும் என்று கூறினார்.