தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால் காற்று மாசு, உடல்நலப்பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த 13 பேருக்கு தூத்துக்குடியில் இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.