தூத்துக்குடி,
துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பெரிய வகை கப்பல்கள் வந்து செல்லும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், துறைமுகத்திற்கு முதல் முறையாக 335.23 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட எம்.வி., சி.எம்.ஏ., சி.ஜி.எம்., தோரியம் என்ற சரக்கு கப்பலை நேற்று கையாண்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதுகுறித்து துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பிரேசிலின் சாண்டோஸ் துறைமுகத்தில் இருந்து சி.எம்.ஏ. சி.ஜி.எம். தோரியம் என்ற சரக்கு பெட்டக கப்பல் நேற்று வந்தது. இந்த கப்பல் 335.23 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலம் மற்றும் 13.5 மீட்டர் மிதவை ஆழம் கொண்டதாகும். 13 ஆயிரம் டி.இ.யு. சரக்கு பெட்டக கொள்ளளவு கொண்ட பெரியவகை சரக்கு கப்பல் ஆகும்.
டி.இ.யு. என்பது கடல்சார் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அளவீட்டு குறியீடு ஆகும். இந்த கப்பல் மெத்தனால் மற்றும் கடல்சார் எரிபொருள் ஆகிய இருவகை எரிபொருட்களிலும் இயங்கும் திறன் கொண்டது. துறைமுகத்துக்கு வந்த கப்பலை வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன் மற்றும் துறைமுக அதிகாரிகள், சரக்கு பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த கப்பலில் இருந்து மொத்தம் 3,276 டி.இ.யு. சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட உள்ளன. இதில் 1,324 டி.இ.யு. இறக் குமதி சரக்குகளும், 1,952 டி.இ.யு. ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளும் அடங்கும். இந்த கப்பல் வ.உ.சி. துறைமுகத்தில் இதுவரை கையாண்டுள்ள சரக்குப் பெட்டக கப்பல்களிலேயே மிக நீளமானதா கும். 2026-27 நிதியாண்டில் கடந்த ஆகஸ்டு மாதம் வரையிலான காலகட்டத்தில், வ.உ.சி. துறைமுகம் 3.67 லட்சம் டி.இ.யு. சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப் பட்ட 3.62 லட்சம் டி.இ.யு. சரக்கு பெட்டகங்களை விட அதிகமாகும். ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்தை பொறுத்தவரை 18.27 மில்லியன் டன் சரக்குகளை துறைமுகம் கையாண்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 17.89 மில்லயன் டன் சரக்குகளுடன் ஒப்பிடுகையில், இது 2.10 சதவீதம் வளர்ச்சி ஆகும்.
தற்போது வ.உ.சி. துறைமுகம் நீளமான கப்பலை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை, பெரிய கப்பல்களை ஈர்ப்பது, சரக்குப் பெட்டக கையாளுதலை அதிகரிப்பது மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் நேரடி இணைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.