தமிழக செய்திகள்

தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் - இடதுசாரி கட்சிகள் புறக்கணிப்பு

நாளை முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தவெக சார்பில் கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.

நாளை ஆலோசனைக் கூட்டம்

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் கூட்டணிக் கட்சிகளுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டணித் தலைவர்களுக்கு நேரில் அழைப்பு

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களை அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடதுசாரி கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கலந்துகொள்ளப் போவதில்லை

இந்தநிலையில், த.வெ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.

அதேநேரத்தில், கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், முதல்-அமைச்சர் விஜய்யை இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து மு. வீரபாண்டியன் மற்றும் பெ. சண்முகம் ஆகியோர் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.