தமிழக செய்திகள்

த.வெ.க. வேட்பாளர்கள் மரகதம் குமரவேல்-சத்தியபாமா வாழ்க்கை குறிப்பு

காலியாக உள்ள 6 தொகுதிகளில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

சென்னை

த.வெ.க. வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா வாழ்க்கை குறிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து உள்ளது. இதில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், காலியாக உள்ள 6 தொகுதிகளில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான த.வெ.க. வெற்றி பெற்று சட்டசபையில் தங்களுடைய பலத்தை அதிகரித்து கொள்வதற்கான ஆர்வத்துடன் களம் இறங்குகிறது. இதன்படி, மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளராக பி. சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

மரகதம் குமரவேல்

மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தையூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை அ.தி.மு.க.வின் நிறுவனர் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில் வேலை செய்துள்ளார்.

அ.தி.மு.க.வில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஒன்றிய தலைவராக இருந்தார். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க.வில் மாவட்ட மகளிர் அணி செயலாளர், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்தவர். இவரது கணவர் குமரவேல் திருப்போரூர் ஒன்றிய செயலாளராகவும், தையூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் தற்போது இருந்து வருகிறார். அவரும் அ.தி.மு.க.வில் இருந்த ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து விலகி த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க.வில் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது. இதையடுத்து மதுராந்தகம் தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2026 தேர்தலில் அவர் 69,284 வாக்குகள் பெற்று, த.வெ.க. வேட்பாளர் ஏழில் கேத்தரீனை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த மே மாதம் 25-ந்தேதி அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் முதல்-அமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார். தற்போது மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சத்தியபாமா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சத்தியபாமா. இவர் உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தார். உள்ளாட்சியில் சிறப்பான களப்பணியாற்றிய இவருக்கு, கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தீவிர பிரசாரத்திற்கு பிறகு, 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர், அ.தி.மு.க.வில் நிலவி வந்த உட்கட்சி பூசல்கள் மற்றும் தலைமை மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிருப்தி அடைந்தார்.

விலகினார்

இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியதோடு, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தில் (த.வெ.க) அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக்கொண்டார்.

சத்யபாமாவின் தந்தை பெயர் பொன்னுசாமி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1975-ம் ஆண்டு பிறந்த இவர் முதலில் அ.தி.மு.க. கட்சியில் தீவிரமாக செயல்பட்டு பின்னர் 2026 மே மாதத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தார்.

2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். தேர்தலில் 81,100 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டி. இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்முனை போட்டி

இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியாக த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதில், மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி.மு.க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிகா சம்பத் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் பானுமதி போட்டியிட உள்ளார். தி.மு.க., த.வெ.க.வை தொடர்ந்து தற்போது, அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. இதனால், மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT