தமிழக செய்திகள்

ராகுல் காந்தி கைதுக்கு த.வெ.க. கண்டனம்

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எஸ்.ஐ.ஆர். நடைமுறையை எதிர்த்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு த.வெ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து அவர் பதவி விலகக்கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், மராட்டியத்தின் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று, ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தின.

இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பஸ் ஒன்றில் புறப்பட்டு டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி சென்றனர்.

தள்ளுமுள்ளு

எனினும், அவர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பின்னர் பஸ்சில் இருந்து இறங்கினர். இதனால், போலீசாருக்கும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அக்கட்சியை சேர்ந்தவர்கள் அந்த பகுதியிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் பிற எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி போலீசார் அவர்களை பிடித்து வேனில் ஏற்றினர்.

த.வெ.க. கண்டனம்

இந்த சம்பவத்திற்கு த.வெ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எஸ்.ஐ.ஆர். நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக்கழகம் கொண்டிருக்கிறது.

எஸ்.ஐ.ஆர். நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக்கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT