திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த போலீசார் ஒருவரை தாக்கிய தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் போலீஸ்காரர் வினோத் தனது வேலை முடிந்து அங்கு ஓய்வில் இருந்தார். பின்னர் அவர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ராஜேஷ் என்பவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அங்கு வந்தார்.
மதுபோதையில் இருந்த ராஜேஷ், அங்கு அமைதியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் வினோத்திடம் பேச்சு கொடுத்து தகராாறு செய்தார். போலீஸ்காரர் எவ்விதப் பிரச்சினையிலும் ஈடுபடாமல் இருந்தபோதிலும், ராஜேஷ் போதையின் உச்சத்தில் ஆபாசமாகவும் திமிராகவும் பேசி வாக்குவாதத்தை வளர்த்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜேஷ் திடீரென போலீஸ்காரர் வினோத் மீது தாக்கினார். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த மற்ற போலீஸ்காரர்கள் உடனடியாகச் செயல்பட்டு தவெக நிர்வாகி ராஜேஷை கைது செய்தனர். மேலும், திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் மீது, அரசுப் பணியில் உள்ள காவலரைத் தாக்கியது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது மற்றும் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் முறையான வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜேஷை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கோர்ட் காவலில் வைக்கத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.