இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில், நாகை மாவட்டம், கீழையூர் தவெக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூபாலனுக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இன்று அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சுமார் 8 மணி நேரமாக, தவெக நிர்வாகி பூபாலன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதே புகாரில் தொடர்புடைய தவெக நிர்வாகி பூபாலனின் நண்பரான பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
8 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோவுக்கு அதிகமான சர்வதேச போதைப் பொருளான மெத்தப்பட்டமைன் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்து, அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து பூபாலனை அதிகாரிகள் கைது செய்தனர்.
100 கிலோவுக்கும் அதிகமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சர்வதேச போதைப் பொருளான பெத்தப்பெட்டமைன் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் சிக்கிய நிலையில், அவரை உடனடியாக கட்சியில் இருந்து தவெக தலைமை நீக்கியுள்ளது. இது தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் சுகுமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நாகை, கீழையூர் தவெக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூபாலன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.