தமிழக செய்திகள்

சட்டம்-ஒழுங்கை சீரழித்துவிட்டது த.வெ.க. அரசு - மு.க.ஸ்டாலின் கண்டனம்

அக்டோபர் 31-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம்தான் தவெகவிற்கு எச்சரிக்கை மணி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் தவெக அரசு, சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு, இவற்றை கண்டித்து வருகிற அக்டோபர் 31-ந்தேதி நாளை தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறப்போகிறது.

சினிமாவுல ஹீரோவா இருக்கின்றவர், நிஜ வாழ்க்கையிலும் இருப்பார் என சிலர் செய்த தவறு ஒட்டுமொத்த மக்களையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. தவெக கட்சி தலைவர், ஆட்சி அமைவதற்கு முன்னால் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை, போதை பொருட்களால் குற்றங்கள் நடக்கிறது.. இதை மட்டும் தான் பேசி ஆட்சிக்கு வந்தார்.

தவெக ஆட்சியில் பட்டப்பகலில் சாலையில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், முதியவர் வீட்டில் நகைக்காக கொலை எல்லாமே சர்வ சாதாரணமாக நடக்கிறது. சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகின்றனர். குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட இந்த அரசின் மீது பயமில்லை. குற்றவாளிகள் இதை அவர்களுக்கான ஆட்சியாக கொண்டாடுகின்றனர். அனைத்து கட்சிகளும் கண்டனம் மற்றும் அறிக்கை தெரிவிக்கின்றனர். ஆனால் முதல் - அமைச்சரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை.

காவல் துறைக்கு முதல் - அமைச்சர் தான் பொறுப்பு. தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை அதிகாரிகளிடம் ஆய்வு கூட்டம் நடத்தினால் தான் தீர்வு கிடைக்கும். ஒரு சில அமைச்சர்கள் மட்டும் தான் பதிலளிக்கின்றனர். ஆனால் அந்த பதிலும் பொறுப்பற்ற பதில்களாக இருக்கின்றது. ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகியும் இவங்க கிட்ட இருந்து ஒரே பதில் திமுக தான். தற்போது தமிழகத்தில் நடக்கும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தவெக நிர்வாகிகள்தான் சம்மந்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை சீரமைக்க முதல் - அமைச்சர் எங்கும் செல்வதற்கு தேவையில்லை. தன்னுடைய கட்சியில் உள்ளவர்களை கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவு குறையும். பெண்களை தவெக அரசு காப்பாற்ற வேண்டாம், தவெகவிடம் இருந்து தான் பெண்களை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது மட்டுமல்லாமல் விலை வாசி உயர்ந்து மக்களும் கஷ்டபடுறாங்க. ரேஷன் கடையில சன்னரக அரிசி போடுரோம்னு சொல்லிட்டு ரேஷன் அரிசில பாலிஷ் செய்து போடுகின்றனர். ரேஷன் கடையில் வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் கடைக்கு சென்றால் அங்கு வெங்காயமே இல்லை. மக்களோட அன்றாட வாழ்க்கையே இந்த விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. தங்கம் வாங்க முடியுமானு ஏழை மக்கள் ஏங்குகின்ற காலம் போயிட்டு. தற்போது அரிசியே வாங்க முடியுமா என்று நினைக்கும் காலம் வந்துவிட்டது.

திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பணவீக்கம் குறைவாக உள்ள மாநிலமாக தமிழ்நாட்டை வச்சிருந்தோம். ஆனால் தவெக ஆட்சியாளர்களுக்கு எந்த துறையிலும் நிர்வாக திறன் இல்லை. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் வாங்காத அதிக விலையாக ரூ. 37-க்கு மின்சாரத்தை வாங்குறாங்க. காரணம், எந்த திட்டமிடலும் தொலை நோக்கும் இல்லை.

மக்களுக்காக நான் பேசுறதை எல்லாம் ஒரு நல்ல அரசு சரிசெய்ய பாக்கணும். எந்த கட்சி மக்கள் பிரச்சினையை பேசுனாலும் அவர்களின் பதிவுக்கு கீழ் திட்டுனாலே போதும்னு விட்டுடுறாங்க. தமிழக மக்களுக்கு அண்ணனா இருப்பேன் மாமாவா இருப்பேன் சித்தப்பா பெரியப்பாவா இருப்பேன் என்று பேசினாரே. முதல்ல அவர் முதல் - அமைச்சரா இருக்கட்டும். அவர் வேலைய அவர் ஒழுங்கா பார்த்தால் எப்படி தமிழ்நாடு பின்னோக்கி செல்லும்? எதாச்சு ஒரு துறையிலாவது தவெக ஆட்சி திமுகவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளதா? எல்லா துறைகளிலும் வீழ்ச்சி பின்னடைவு தான். இதை எதிர்த்துதான் அக்டோபர் 31-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம். இதுதான் தவெகவிற்கு எச்சரிக்கை மணி. இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு முதல் - அமைச்சர் செயல்படணும். மக்களுக்காக தான் இருக்கிறோம். மக்களும் நம்மை நம்பி தான் இருக்கிறாங்க. அதனால் தான் இந்த ஆர்ப்பாட்டம். ஆள தெரியாத ஆட்சிக்கு ஆர்ப்பாட்டத்தில் பாடம் புகட்டுவோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT