தமிழக செய்திகள்

தவறான பாதையில் தவெக அரசு செல்கிறது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக உருவானதே திமுகவை எதிர்த்து தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்க உள்ளோம். அதிமுகவுக்கு சில எம்.எல்.ஏ.க்கள் துரோகம் செய்துள்ளனர். கொறடா உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக தவெக அரசுக்கு வாக்களித்துள்ளனர்.

6 அமைச்சர்கள் மற்றும் 10 வாரியத் தலைவர்கள் பதவி கொடுப்பதாக தவெக பேரம் பேசியுள்ளது. அதனால் அவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஜெயலலிதா புகழ் சொல்லி தான், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றோம். அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாமல் துரோகம் விளைவிக்கிறார்கள் சில முன்னாள் அமைச்சர்கள்.

தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொல்லும் முதல்-அமைச்சர் விஜய், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடும் நிலவும்போது ஒரு தரப்பினரை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்?. இதுதான் தூய்மையா?. எல்லா இயக்கங்களுக்குட சோதனைவரும், பிரிவு வரும். ஆனால், எந்த தலைவரும் பிரிந்தவர்களின் இல்லங்களுக்கு சென்றது இல்லை. ஆரம்பத்திலேயே தவறான பாதைக்கு செல்கிறா தவெக விஜய். இது தவறான முன்னுதாரணம்.

108 இடங்களில் மட்டும் தான் தவெக வென்றது. விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் எண்ணிக்கை 107 ஆனது. ஒரு எம்.எல்.ஏ. வாக்களிக்க முடியாததால் எண்ணிக்கை 106 ஆனது; விஜய் தேர்தலின்போது சொன்ன நடைமுறைகளை இப்போது பின்பற்றவில்லை. நானாக தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை. பிரசாரத்தில் நான் திமுகவை தான் தாக்கி பேசினேன்.

அதிமுக உருவானதே திமுகவை எதிர்த்து தான். தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்ற ஆசையில் நிர்வாகிகளிடம் தவறான தகவலை சொல்கின்றனர்; நூற்றுக்கு நூறு சதவீதம் திமுகவுடன் எந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பெரும்பான்மை சிறுபான்மை என்பது இப்போது முக்கிய இல்லை. யார் பொதுச்செயலாளர் என்பது தான் இங்கு முக்கியம். கட்சியின் அதிகாரம் என்னிடம் தான் உள்ளது. கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு தான் உள்ளது. பேரவையில் விதி, மரபு பின்பற்றப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.