சென்னை,
தனது போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதல்-அமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டி.சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்து விளக்கமளித்த அமைச்சர் டி.சரத்குமார், தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அமைச்சர் டி.சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் சென்னை எழும்பூரில் இன்று தி.மு.க. மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்திற்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறாததால் மேடை அமைக்க அனுமதிக்க முடியாது என கூறினர்.
இதையடுத்து தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து காவல்துறை வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை த.வெ.க. அரசு மிரட்டுகிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது! த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டு!
இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதல்-அமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்! “டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.