சென்னை,
தமிழக கோவில்களில் போதிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக ஏற்படுத்தி, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு போதிய வசதிகளை தவெக அரசு ஏற்படுத்தித் தராததால் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் மயங்கியதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
இந்து விரோத திமுக ஆட்சியின் அலட்சியத்தால் பழனி, திருச்செந்தூர் போன்ற திருத்தலங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த கொடூரம் தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடராமல் இருப்பதை முதல்-அமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும்! அனைவருக்குமான அரசு என்று முழங்குவதோடு நிற்காது, இந்து திருக்கோவில்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் பல பக்தர்கள் மயங்கி விழுந்த இந்தக் கோர நிகழ்வுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாகத் தார்மீகப் பொறுப்பேற்று, இனியாவது தமிழகத் திருக்கோவில்களில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, பக்தர்கள் நலனைக் காப்பதை உறுதி செய்ய வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.