திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது: - தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு ஒருபுறம், நிர்வாக சீர்கேடு மறுபுறம், இவை தவிர பாலியல் குற்றங்கள், கொலை - கொள்ளை என்ற செய்திகள் இல்லாத நாட்களே இல்லை. கடந்த சில நாட்களாக குழந்தைகள் மாயமாகி வருகின்றனர். மின் வெட்டு, அரிவாள் வெட்டு, விலைவாசி உயர்வு என நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் பாதித்துள்ள ரீல்ஸ் ஆட்சியாக இன்றைய ஆட்சி இருக்கிறது.
நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, "வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும்" என்றேன். ஆனால், இன்றைக்கு என்ன நிலை என்று கேட்டால்,தவெகவுக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களே தவெக ஆட்சியை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தவெக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படையை பாதுகாப்பதற்கு இன்னொரு படையை உருவாக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்து, இன்றைக்கு நாட்டிலே ஆளுகின்ற அநியாய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நான் தொடக்கத்தில் சொன்னேன். ஆறு மாதம் என்று..ஆனால் ஆறு மாதம் கூட தாங்காத அளவுக்குத்தான் இந்த ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது. விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள்” என்று கூறினார்.