தமிழக செய்திகள்

தவெக அரசின் செயல்பாடுகள் அருமையாக உள்ளது: வைகோ பேட்டி

நாங்கள் இன்னும் கூட்டணியை பற்றி யோசிக்கவே இல்லையே.. அதற்கு எல்லாரும் உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என சொல்கிறார்கள் என்று வைகோ கூறினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது: தவெக ஆட்சி அருமையாக உள்ளது. குற்ற சம்பவங்கள் பல ஆண்டுகளாக எல்லா ஆட்சியிலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படி சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது, வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். மத்திய அரசு அந்த சட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். ஜாமீனில் நீதிபதிகள் விடவே கூடாது. அப்படி ஒரு வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் தான் இருக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால் தான், இந்த மிருகங்களுக்கு கொஞ்சமாவது பயம் இருக்கும். இது இப்போ நடக்கவில்லை. எல்லாரது ஆட்சியிலும் தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு முந்தியும் நடக்கத் தானே செய்தது.

தவெகவுடன் கூட்டணியா?

நாங்கள் இன்னும் கூட்டணியை பற்றி யோசிக்கவே இல்லையே.. அதற்கு எல்லாரும் உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என சொல்கிறார்கள். நாங்கள் எவ்வளவு விசுவாசமாக இருந்து திமுகவை வெற்றி பெற வைக்க முடியுமோ அந்த அளவுக்கு வேலை செய்தோம். சாத்தூர் தொகுதியில் கூட கடுமையாக பிரசாரம் செய்து திமுகவை வெற்றி பெற செய்தோம். திமுக கூட்டணியில் இருந்தவர்கள் பலரும் இப்போது ஆட்சியில் கூட சேர்ந்துவிட்டார்கள். நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. எந்த முடிவும் எடுக்கவில்லை.

அவசரப்படவில்லை

ஆனால் சமூக வலைத்தளத்தில் இருப்பவர்கள் எங்களை எப்படி பேச முடியுமோ அப்படி பேசி வருகிறார்கள். நாங்கள் அவசரப்படவில்லை. நாங்கள் எதுவும் பேசவில்லை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் 27 ஆம் தேதி எங்கள் பொதுக்குழு கூடும். எல்லாரது கருத்துக்களையும் கேட்டு தான் நாங்கள் முடிவு எடுப்போம்” என்றார்.