சென்னை,
கோவை காந்திபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களை கொண்ட பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் நூலகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் புத்தகங்கள் வாங்க ரூ.50 கோடியும், இ-புத்தகங்கள் வாங்க ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பெரியார் நூலகத்தில் இடம் பெற்றிருந்த புத்தகங்கள் போலி பதிப்பகங்கள் மூலம் வாங்கப்பட்டு உள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு பயன் படுத்தி புத்தகங்களின் முகப்புரைகள் எழுதப்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.மேலும் புத்தகங்களின் எழுத்தாளர்கள் பெயர்களும் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தன.
இதுகுறித்த குற்றச்சாட்டுகளை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியதுடன், அரசு இந்த புத்தகங்கள் குறித்தும், பதிப்பகங்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து பெரியார் நூலக புத்தக கொள்முதல் விவகாரம் பெரும் புயலை கிளப்பியது.
அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் பெரியார் நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் நடந்த ஊழலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதுதொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். எனினும், தி.மு.க. இந்த குற்றசாட்டை மறுத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை புரசைவாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“த.வெ.க. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் நூலகங்களுக்கு தற்போது வரை ஒரு நூல் கூட கொள்முதல் செய்யவில்லை. தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் நூலகங்களில் உள்ள புத்தகங்கள் எல்லாம் கடந்த கால ஆட்சிகளின்போது கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள்தான்.
அகல்விளக்கு பதிப்பகம் முறைகேட்டில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். போலி புத்தக கொள்முதலுக்கு யார் காரணம் என கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம்(DVAC) விசாரணை நடத்தி வருகிறது.
நூலக புத்தக கொள்முதலுக்கு புதிய குழு அமைக்க உள்ளோம். நூலகங்களுக்கான நூல்களை டிசம்பர் மாதத்தில் வாங்குவதற்காக குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எழுத்தாளர்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்யப்படும்.
தி.மு.க. ஆட்சியில் நூலகங்களில் நடந்துள்ளது இமாலய ஊழல் போல் தெரிகிறது. புகழ்பெற்ற எழுத்தாளரின் பெயரைப் பயன்படுத்தி கலைஞர் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த போலி ஆய்வு நூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கன்னிமாரா நூலகத்திலேயே 523 போலி புத்தகங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புகார்களில் சிக்கும் த.வெ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டப்படி விசாரணையும் நடைபெற்று வருகிறது. தொகுதியை சேர்ந்த ஒருவரை தாக்கியதாக துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்பை விட காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். குற்ற சம்பவங்களைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் நடந்த குற்றங்களை ஒப்பிட்டு நியாயப்படுத்த விடும்பவில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.