சென்னை,
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே இடதுசாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் கோடிக்கணக்கான வாக்காளர்களை நீக்கியதாக தலைமைத் தேர்தல் ஆணையர் மீது கம்யூனிஸ்டு கட்சி புகார் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"மதுராந்தகத்தில் தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்கின்றனர். நாங்கள் அங்கு பிரசாரத்துக்கு சென்றபோது நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டோம். அப்போது 'எல்லோரும் பணம் கொடுக்கிறார்கள், நீங்கள் பணம் கொடுக்கவில்லையே.. ' என்று சில கிராம மக்கள் என்னிடம் கேட்டார்கள். எந்தெந்த கட்சி எல்லாம் பணம் கொடுத்தார்கள் என்று கேட்டபோது, தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்ததாகச் சொன்னார்கள்.
தூயசக்தி, நாங்கள் ஓட்டுக்கு எல்லாம் பணம் கொடுக்க மாட்டோம் என்றுதான் கடந்த தேர்தலிலும் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் செய்தார். இப்போதும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் மதுராந்தகத்தில் பொதுமக்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலம் இது. 'தவெக அதிக பணம் கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் கொஞ்சமாவது கொடுங்கள்' என்று மக்கள் எங்களிடம் பேரம் பேசும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
எங்கள் கட்சியின் பலம், கொள்கைகள் குறித்து எடுத்துரைத்து நாங்கள் எந்த சூழலிலும் பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறினோம். இது குறித்து சம்மந்தப்பட்ட தலைவர்கள் பதிலளிக்க வேண்டும். நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் வாக்குரிமையை பறித்திருக்கிறது. பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.