சென்னை,
தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. சார்பாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் தோல்விப் பயத்தால் இந்த அரசு, அரசாங்கத்தையும், அரசாங்க ஊழியர்களையும், நிர்வாகத்தையும் துஷ்பிரயோகம் செய்து இடைத்தேர்தலில் எப்படியாவது வென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அரசாங்க ஊழியர்களைத் தன்னுடைய வெற்றிக்காக த.வெ.க. அரசு பயன்படுத்தி இருக்கிறது என நாங்கள் எடுத்த வீடியோ பதிவு மூலம் தற்போது புகார் அளித்திருக்கிறோம்.
விஜய் செல்லும்போது கிட்டத்தட்ட ரூ.20 லட்சத்திற்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. கொடி, பேனர். தடுப்புகள் எனப் பல லட்சம் செலவு செய்திருக்கிறார்கள். இந்தச் செலவை மதுராந்தகம் வேட்பாளர் பெயரில் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வீட்டிற்கும் டிபன் பாக்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
இது வெறும் டிபன் பாக்ஸ் மட்டுமல்ல. இதில் ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் வைத் துக் கொடுக்கிறார்கள். எனவே அங்கு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்யான, அவதூறான, அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் பேசி இருக்கிறார். எனவே அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.