சென்னை,
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வருகிறது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனால், 113 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. கைவசம் உள்ளனர். இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. எனினும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்றும் தெரிவித்தன. இதனால், தலா 2 எம்.எல்.ஏ.க்கள் என இந்த எண்ணிக்கை 117 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளது. வி.சி.க. இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஆதரவு கிடைக்கும்போது, த.வெ.க.வின் மொத்த பலம் 119 ஆக இருக்கும்.
த.வெ.க. தலைவர் விஜய் கட்சி தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது, சந்தன கலர் பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து வருவார். தேர்தல் பிரசார நிகழ்வுகளிலும் அவர் அதேபோன்று உடை அணிந்து வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்.
ஆட்சி அமைக்க கவர்னரை 2 முறை சந்திக்க வந்தபோதும், அதேபோன்ற உடையில் தான் வந்தார். ஆனால் நேற்று, கவர்னரை 3-வது முறையாக சந்திக்க வந்தபோது, நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை அரைக்கை சட்டை அணிந்து வந்திருந்தார். கையில் சிவப்பு கலரில் கயிறு கட்டியிருந்தார். கவர்னரை சந்தித்தபோது முகமலர்ச்சியுடன் விஜய் காணப்பட்டார், அவரின் தோளை கவர்னர் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.