சென்னை,
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி திடீரென நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பினார்.
பின்னர், மீண்டும் சில மாதங்களுக்கு பின்னர் நல்லகண்ணுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதாக ஆஸ்பத்திரியின் டீன் கூறினார். இதனையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் சிறிது மாதங்களுக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். அவ்வப்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதல்-அமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்து பார்ப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இன்று காலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது.
இதனிடையே நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஆண்டாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலை குறித்து த.வெ.க. தலைவர் விஜய் நலம் விசாரித்தாக தகவல் வெளியாகி உள்ளது. நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.