தமிழக செய்திகள்

நாளை வேளாங்கண்ணி செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்

தேர்தல் வெற்றிக்காகவும், கட்சி ரீதியான தடைகளை கடப்பதற்காகவும், தொடர் ஆன்மீக பயணங்களை விஜய் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வருகிற 4-ம் தேதி வெளியாகிறது. இந்தநிலையில், தவெக தலைவர் விஜய் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 28-ம் தேதி அதிகாலையில் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வேல் வழங்கப்பட்டது.

அதிகாலையில் கோவில் நடை திறந்தபிறகு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் விஜய் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள் சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். சூரசம்ஹார மூர்த்தி சன்னதிக்கும் சென்று வழிபட்டார்.

திருச்செந்தூரை தொடர்ந்து, மராட்டிய மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று விஜய் தரிசனம் செய்தார். இதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சீரடி சென்றார். அங்கு சாய்பாபாவை, விஜய் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் விஜய் சென்னை திரும்பினார்.

தேர்தல் முடிவு வெளியாக இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் விஜய், வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

அதன்படி, நாளை (2-ம் தேதி) தவெக தலைவர் விஜய் வேளாங்கண்ணி செல்கிறார். வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நாளை காலை 5 மணிக்கு விஜய் பிரார்த்தனை செய்கிறார். அதனை தொடர்ந்து நாகூர் தர்காவில் நடைபெற உள்ள சிறப்பு வழிபாட்டிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

பல மத தலங்களை ஒரே பயணத்தில் இணைப்பது, சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நவக்கிரக தலங்களுக்கும் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அரசியல் களத்தில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் விஜய், தனது தேர்தல் வெற்றிக்காவும், கட்சி ரீதியான தடைகளை கடப்பதற்காகவும் இந்த தொடர் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே த.வெ.க.வின் தலைமை அலுவலகமான பனையூரில், நேற்று தலைவர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெறும் வேட்பாளர்கள், எந்நேரம் ஆனாலும் பனையூருக்கு வரவேண்டும். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என விஜய் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிப்புகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.