தமிழக செய்திகள்

இன்று மாலை 3.30 மணிக்கு கவர்னரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்

கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார்.

அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம். மேலும், சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்கெடுப்பும் நடைபெறும்.

இதில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ள முடியும்; இதனால் ஒரு தொகுதியை த.வெ.க. இழக்கும். எனவே த.வெ.க.வுக்கு சட்டசபையில் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும்.

தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்று சூழல் நிலவியது. த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று மாலை 3.30 மணிக்கு சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோருகிறார். மேலும் பெரும்பான்மைக்கு தேவையான மெஜாரிட்டி கடிதத்தையும் கவர்னரிடம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

தமிழக பொறுப்பு கவர்னராக இருக்கும் அர்லேகர் கேரளம் மாநிலத்தில் கவர்னராக உள்ளார். அங்கு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அங்கு அவர் அதற்கான பணிகளில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் கவர்னர் அர்லேகர் கேரளம் மாநிலத்தில் உள்ளார். விஜய் மாலை சந்திக்க உள்ள நிலையில், அவர் தற்போது கேரளாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.