தமிழக செய்திகள்

தவெக தலைவர் விஜய் சீரடி பயணம்

திருச்செந்தூரில் விஸ்வரூப தரிசனம் செய்த கையோடு நடிகர் விஜய் இன்று ஷீரடி சாய் பாபாவை தரிசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தவெக தலைவர் விஜய் நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற விஜய், அங்கு கடல் குளித்து முடித்துவிட்டு விஸ்வரூப தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் சார்பில் நடிகர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதே போன்று செந்தூர் முருகனின் நினைவாக அவருக்கு வேல் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.

திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உடனடியாக சென்னை திரும்பி இருக்கும் நடிகர் விஜய் அடுத்ததாக தனது இஷ்ட தெய்வமான ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக இன்று (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மராட்டியத்திற்கு விஜய் புறப்பட்டுள்ளார். ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் முடித்த பிறகு இன்றே விஜய் சென்னை திரும்புவார் என்று தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.