சென்னை,
ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மதுராந்தகம் தொகுதியில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தாராபுரத்தில் ஆரம்பத்தில் தவெக முன்னிலையில் இருந்தது; சிறிது நேரத்திற்கு பின்னர் தவெகவை பின்னுக்கு தள்ளி அதிமுக முன்னிலை வகித்தது. இருப்பினும் மதுராந்தகம் தவெக கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 5 சுற்றுகளுக்கு பின்னர் தாராபுரத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக மீண்டும் முன்னிலைக்கு வந்தது.
அதனை தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தற்போது வரை தவெகவே முன்னிலை வகித்து வருகிறது. மதுராந்தகத்தில் 10-வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேல் வேட்பாளர் 38,128 வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளார். (வாக்கு வித்தியாசம் 12,774) திமுக வேட்பாளர் பரந்தாமன் 25,354 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 21,537 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளார்.
தாராபுரத்தில் 16 சுற்று முடிவில், தவெக வேட்பாளர் சத்தியபாமா வேட்பாளர் 48,615 வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளார். (வாக்கு வித்தியாசம் 9,636) திமுக வேட்பாளர் சுகன்யா 39,039 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பானுமதி 31,067 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பனையூர் தவெக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தவெக தொண்டர்கள் ஆட்டம், பாட்டத்துடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.