சென்னை,
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், "நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வருகிறது. அதுகுறித்து விரைவில் விளக்கம் அளிக்கிறேன்" என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
முதலில் ஜூன் 11-ம் தேதி தனது முடிவை அறிவிக்க திட்டமிட்டிருந்த ராகவா லாரன்ஸ், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவை அடுத்து தனது அறிவிப்பை ஒரு நாள் தள்ளிவைத்தார். அதனைத்தொடர்ந்து 12-ம் தேதி, அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். அவர் பேசுகையில்,
"நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என யோசித்தேன். நீங்கள் வாருங்கள் என அழைத்தது சந்தோஷம். ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். அதை விரைவில் அறிவிப்பேன். என் ரசிகர்களாகிய உங்களை அழைத்து என் தாயை மேடை ஏற்றி முக்கிய அறிவிப்பை விரைவில் தெரிவிக்க உள்ளேன்" என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்து பேசிய அவர்,
"தவெக-வின் ஒரு மாத ஆட்சி சிறப்பாக உள்ளது. அமைச்சர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். மாற்றம் தேவை என்று தான் வாக்களித்து உள்ளீர்கள். சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து பேசிய ராகவா லாரன்ஸ்,
"விஜய் மீது உள்ள பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்கின்றன. வளர்ந்து வரும் தவெக-வை பிடிக்காததால் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். கல்வி நிலையங்கள் மற்றும் கோவில்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் என்னையும் விமர்சிப்பார்கள்" என்று தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தினர் குறித்து பேசிய அவர்,
"தமிழக வெற்றிக் கழகத்தினர் தற்குறி அல்ல. அவர்கள் குறிவைத்து தாக்கும் அம்புக்குறி' என்றார்.
பாஜகவில் இருந்து விலகி புது கட்சி தொடங்க உள்ள அண்ணாமலை பற்றி பேசிய அவர், ``அண்ணாமலை உட்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சிறந்த அரசியல் புரிதல் கொண்டவர் அண்ணாமலை'' என்றார்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் விரைவில் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.