தமிழக செய்திகள்

தவெக அமைச்சரின் தன்னிலை விளக்க வீடியோ திருப்தியளிக்கவில்லை! - நயினார் நாகேந்திரன்

அமைச்சரின் விளக்கம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தவெக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத், பொதுவெளியில் போதைப்பொருள் உபயோகித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு அவர் கொடுத்துள்ள தன்னிலை விளக்கமும் கடும் அதிர்ச்சியளிப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புகிறது.

எப்படி மக்கள் சேவையாற்றுவார்?

சுமார் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, “ஆன்டிபயாடிக்” உள்ளிட்ட வீரியமிக்க மருந்துகளையே, மருத்துவர்கள் “டானிக்” வடிவில் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஒன்றரை வயது குழந்தைக்கு எந்த மருத்துவர் மாத்திரை கொடுத்தார்? அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் குழந்தையையும் காணவில்லை, உடல்நிலை சரியில்லாத குழந்தையை எங்கேயோ விட்டுவிட்டு தகப்பன் ஜாலியாக கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டே மாத்திரையை நுணுக்கிக் கொண்டிருந்தாரா? குறிப்பாக, குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை, யாராவது போதைப் பொருள் போல கோடிழுத்துக் கொண்டிருப்பார்களா? மாத்திரையைக் கூட போதைப்பொருளைப் போலவே “ரெடி” செய்யும் மனநிலை கொண்டவர் எப்படி நிதானமாக மக்கள் சேவையாற்றுவார்?

இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பும் இவ்விவகாரத்தை, முதல்-அமைச்சர் விஜய் எவ்வித சமரசமுமின்றி தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.