தமிழக செய்திகள்

கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்.எல்.ஏ. ஜாமின் கோரி மனு

கடலூர் மத்திய சிறையில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் (வயது 36). இவர், பெண் கலெக்டருக்கு தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்து கடந்த 23-ந்தேதி கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எம்.எல்.ஏ. கைது

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் நள்ளிரவு 1.15 மணியளவில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக குடியிருப்பில் இருந்த குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற(எண்-1) நீதிபதி (பொறுப்பு) பானுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிறையில் அடைப்பு

இதற்கிடைய அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ.வை வருகிற 11-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பானுமதி உத்தரவிட்டார். பின்னர் 2 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. நேற்று அதிகாலை 4 மணியளவில் கட லூர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து அருள் விக்னேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமின் கோரி மனு

இந்த நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஜாமின் கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணை நாளை மறுநாள் (டிசம்பர் 1) நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT