தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்த புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

ஆபாச குறுஞ்செய்தி

த.வெ.க. ஆட்சி அமைந்து 6 மாதம் நிறைவடைந்து உள்ளது. சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சமீபகாலமாக த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.

தவெக எம்.எல்.ஏ. மறுப்பு

அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்து இருக்கிறது. தற்போது இந்த விஷயம் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. சர்ச்சையில் சிக்கியுள்ள த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், த.வெ.க. கூட்டணி கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்த சூழலில் இந்த குற்றச்சாட்டை த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், சட்ட அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர் மறுத்துள்ளனர். ஆனால், கலெக்டர் இது தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக 10 நாட்களுக்கு முன் விழுப்புரம் கலெக்டரும், பத்மஜாவின் கணவருமான ஷேக் அப்துல் ரகுமான், தலைமை செயலர் சாய்குமாரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

மத்திய அரசுக்கு கோரிக்கை

இதுகுறித்து தலைமை செயலாளரும் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. இதனையடுத்து தலைமை செயலாளருக்கு அளித்த புகார் விபரங்களை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு, முறைப்படி கலெக்டர் பத்மஜா அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்த புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி விஜயா ரஹாத்கர், தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

7 நாட்களுக்குள் அறிக்கை

அதில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உயர் அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. எவ்வித அரசியல் தலையீடும் இன்றி இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT