தமிழக செய்திகள்

த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார்: மருத்துவமனைக்கு விரைகிறார் முதல்-அமைச்சர் விஜய் - போலீஸ் குவிப்பு

சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

வி.எஸ்.பாபுவின் உடல்நிலை

வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. இதற்கிடையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக அறிக்கைகள் வெளியாகாததால், மீண்டும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன. இதுகுறித்து அவரது தரப்பினர் கூறுகையில், வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார் என்றனர்.

சென்னை ஐகோர்ட்டு

இந்த நிலையில், கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்பூர்வமாக அளிக்கக் கூடிய தகவல்களை வெளியிடக்கோரி கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் கொளத்துர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரைந்த நிலையில், உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று காலமானார்

த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு கடந்த 70 நாள்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வி.எஸ்.பாபு இன்று காலமானார். இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு வி.எஸ். பாபு அவர்கள், நீண்டகால சுவாசக் கோளாறு காரணமாக 2026 செப்டம்பர் 9 ஆம் தேதி எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

முதல்-அமைச்சர் விஜய்

விரிவான மருத்துவ மேலாண்மை மற்றும் எங்களின் பல்துறை மருத்துவக் குழுவின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, 2026 நவம்பர் 19 ஆம் தேதி மதியம் 2:24 மணிக்கு அவர் காலமானார். இந்த இக்கட்டான நேரத்தில், எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடலை காண, மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் விஜய் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ன. இதனையடுத்து அங்கு மருத்துவமனை வளாகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT