தமிழக செய்திகள்

தவெக பெரும்பான்மையை நிருபிக்க அவகாசம் அளிக்க வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தவெக தலைவரை பதவி ஏற்க அனுமதிக்கவேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தவெக தலைவரை பதவி ஏற்க அனுமதித்து, பெரும்பான்மையை நிருபிக்க அவகாசம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில் தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை 2 முறை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி. மீதமுள்ள ஆதரவைப்பெற பாஜக கூட்டணியில் இல்லாத விசிக, கம்யூனிஸ்ட் ஆதரவை கோரியுள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் ஆதரவை தெரிவித்துள்ளது.

தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல் எழுத்துப்பூர்வ ஆதாரம் (documentary proof) மற்றும் 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியல் (letter of support) வழங்குமாறு கவர்னர் தவெக தலைவர் விஜயிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1989ம் ஆண்டு கர்நாடகாவில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எஸ்.ஆர். பொம்மையின் ஆட்சியில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை விளக்கி கொண்டதாக கவர்னருக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து எஸ் ஆர் பொம்மை பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கவர்னர் பெண்டேகண்டி வெங்கடசுப்பையா குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சாசனப் பிரிவு 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் உத்தரவின் பேரில் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து எஸ் ஆர் பொம்மை உச்சநீதிமன்றத்தை அணுகினார். இதனை தொடர்ந்து 1994 ம் ஆண்டு இந்திய அரசியல் சாசன வரலாற்றில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு (Constitutional Bench) இவ்வழக்கை விசாரித்து முதல்-அமைச்சருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை சட்டமன்றத்தில் நிரூபிக்க முடியும். அரசியல் சாசன சட்டம் 356 ஐ தவறாக பயன்படுத்தினால் ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற வரலாற்று சிறப்பு மிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை கவர்னர் உணரவேண்டும்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அனைவரும் ஏற்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாஜக ஆதரவில்லாத கட்சித்தலைவர்கள் அனைவரும் கவர்னரின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனவே பாஜகவின் நிழலாக கவர்னர் செயல்பட்டு ஜனநாயக படுகொலை செய்யாமல், தமிழக வாக்காளர்களின் தீர்ப்பை ஏற்று தவெக தலைவரை பதவி ஏற்க அனுமதித்து, பெரும்பான்மையை நிருபிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.