சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு அண்டை மாநிலங்களுக்குப் படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள் – தொழில் வளத்தைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டாத தவெக அரசால் மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி உயரும்?
தூத்துக்குடியில் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்வதற்காக கடந்த ஆட்சியில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்த Mazagon Dock Shipbuilders Limited (MDL) எனும் நிறுவனம் தற்போது ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த கவலையைத் தருகிறது.
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவதாக INSTA வில் REELS கள் வருகிறதே தவிர, ஆக்கப்பூர்வமான எந்தவொரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவோ, அதனால் எந்தவித முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் உருவானதாகவோ இதுவரை தெரியவில்லை.
தொழில்நுட்ப ரீதியிலும், உட்கட்டமைப்பு வசதிகளிலும் எப்போதுமே இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில், தொழிலைத் தொடங்க முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட பன்னாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திடீரென அண்டை மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் தவெக அரசு முனைப்புக்காட்டத் தவறியுள்ளதாக இளைஞர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு, ஏற்கனவே தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு திட்டமிட்ட படி தமிழகத்தில் தொழில் தொடங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.