சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தவெக பிரசாரப் பாடல் ஒலிபரப்பப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நேற்று காஞ்சிபுரம் பள்ளி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி என கல்விக் கூடங்களை அரசியல் மேடைகளாக மாற்றுவது ஆளுங்கட்சிக்கு அழகல்ல.
அரசு நிகழ்ச்சிகளில் என்ன பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட கல்லூரி நிர்வாகத்திற்கு இல்லையா? நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் இதுபோன்ற அரசியல் சார்ந்த பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்பது அங்கிருந்த ஒருவருக்குக் கூட தெரியாதா?
தமிழக முதல்-அமைச்சரே, அரசு நிகழ்ச்சிகள் உங்கள் புகழ் பாடும் மேடைகள் அல்ல என்பதை உங்கள் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் எப்போது உணர்த்தப் போகிறீர்கள்?
இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளை அரசியல் கலப்பின்றி, முறையான நிகழ்ச்சி நிரலுடன் நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.