சென்னை,
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் ஆட்சி, அதிகாரத்தை கைப் பற்றி இருக்கும் த.வெ.க. தற்போது அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில் த.வெ.க.வும் அரசியல் அரங்கில் தங் களை பலப்படுத்திக்கொள்ள வியூகங்களை வகுக்க தொடங்கி யுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது. இது கூட்டணியாகவும் தொடருமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். ஏனென்றால் கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுங்கள் என்று விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு வெளிப்படையாகவே த.வெ.க. அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று அந்த கட்சிகள் த.வெ.க. அமைச்சரவையிலும், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியாகவும் தொடரும் பட்சத்தில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளை இழக்க நேரிடும்.
ஏற்கனவே அ.தி.மு.க. 2 பிரிவாக உடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்குள் த.வெ.க.வின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் களத்தை அனல் பறக்க வைத்துள்ளது.
அந்த கட்சிகளை அரசியலில் இருந்து ஓரம் கட்ட சூட்டோடு, சூடாக உள்ளாட்சி தேர்தலையும் நடத்த த.வெ.க. அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணியும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான 'மாஸ்டர் பிளானை' த.வெ.க. உருவாக்கி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் அது த.வெ.க.வுக்கு வெற்றியாகவே அமையும் என்று அக்கட்சி கருதுகிறது.
பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கை, மதுக்கடைகள் மூடல், 200 யூனிட் இலவச மின்சாரம், முந் தைய ஆட்சிகளின் நல்ல திட்டங்களை தொடர செய்தல் போன்றவை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று முதல்-அமைச்சர் விஜய் கருதுகிறார். உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சி அதிகாரத்தை சிறப்பாக முன் னெடுத்து செல்ல முடியும் என்று முதல்-அமைச்சர் விஜய் நினைக்கிறார். எனவே அதற்கேற்ப உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க.வை தயாராக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளனார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெறாத 8 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம். திருவாரூர், நீலகிரி, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், தென் காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் த.வெ.க. கூடுதல் கவனம் செலுத்த உள்ளது.
இந்த 8 மாவட்டங்களில் தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே அங்கு உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க. வெற்றி கொடி பறக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.