தமிழக செய்திகள்

தொழிற்சங்கத்தை வலுப்படுத்தும் த.வெ.க.: ஒரு மாதத்தில் 90 சதவீத அ.தி.மு.க. நிர்வாகிகள் வருவார்கள் - ஆதவ் அர்ஜுனா

எம்.ஜி.ஆர். வழியில் நடக்கக் கூடியது த.வெ.க.தான் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை,

பனையூரில் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள், தவெக பொதுச்செயலர் ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதன்படி அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகி கமலக்கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் 100 பேர் த.வெ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். மேலும் அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி, அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு நிர்வாகிகளும் இணைந்தனர். தவெகவுக்கு இதுவரை தொழிற்சங்கம் இல்லாத நிலையில், கமலக்கண்ணன் இணைவுக்கு பிறகு புதிய தொழிற்சங்கம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் த.வெ.க.வில் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-

இன்னும் ஒரு மாதத்தில் 90 சதவீத அ.தி.மு.க. நிர்வாகிகள் த.வெ.க.வுக்கு வருவார்கள். அ.தி.மு.க.வினருக்கு ஆபர் எதுவும் கொடுத்து அழைக்கவில்லை. த.வெ.க. மட்டும் தான் ஒரே நம்பிக்கை என அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

அ.தி.மு.க.வில் இருந்து வரும் தலைவர்களை நாங்கள் ஒரு குடும்பம் போல வரவேற்கிறோம். காரணம், எம்.ஜி.ஆர் வழியில் நடக்கக் கூடியது த.வெ.க.தான். செங்கோட்டையன் அண்ணனுக்கு தலைவர் கொடுக்கும் மதிப்பை பார்த்து அவர்கள் வருகிறார்கள். 90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் த.வெ.க.வில் சேருவதற்கு முடிவெடுத்துவிட்டார்கள்.

பா.ஜ.க.வுடன் சேர்ந்து சந்தித்த தோல்விகளை கூட அ.தி.மு.க. தொண்டர்கள் என்ன செய்வது என தாங்கிக் கொண்டார்கள். தி.மு.க. - அ.தி.மு.க. சேர்ந்து செய்த சூழ்ச்சியால்தான் அ.தி.மு.க.வினர் நம்பிக்கை இழந்தனர். ஜெயலலிதா தற்போது இல்லையே என நினைத்தார்கள். அதனால்தான் த.வெ.க.வில் வந்து சேர்ந்தனர்

புதுச்சேரியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் இ.பி.எஸ். முதல்-அமைச்சராக ஆதரவு என கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். 47 எம்.எல்.ஏ.க்களுடன் இ.பி.எஸ். எப்படி முதல்-அமைச்சர் ஆக முடியும்? பின்னர்தான் தெரிந்தது. உதயநிதியும், இ.பி.எஸ்.சும் சேர்ந்து உதயநிதி முதல்-அமைச்சராகவும், இ.பி.எஸ். துணை முதல்-அமைச்சராகவும் ஆக சூழ்ச்சி நடந்தது. அதை முதன் முதலில் எதிர்த்தது கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வி.சி.க.தான்.

செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தபோது சிறிய கட்சி என விமர்சித்தனர். தமிழகத்தில் கட்சி நிதி முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வெளியான அன்றே தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.