தமிழக செய்திகள்

‘த.வெ.க. தொண்டர்கள் என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர்..’ - கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் புகார்

தமிழகப் பெண்கள் ஒரு பொறுப்பற்ற தலைவரை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என ரஞ்சா நாச்சியார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மீது விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த நடிகை ரஞ்சனா நச்சியார், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.

இந்த நிலையில், த.வெ.க. தொண்டர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தன் மீது அவதூறு பரப்புவதாகவும், தனிப்பட்ட முறையில் தனக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் புகார் அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் முன்பு த.வெ.க.வில் இருந்தேன். த.வெ.க. தலைவர் விஜய், பெண்கள் குறித்து சில ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சுகளை பேசியதால், மகளிர் தினத்தன்று நான் கட்சியை விட்டு விலகினேன். அவர் கட்சி தொண்டர்களை சந்திக்க ஒருபோதும் தயாராக இருந்ததில்லை.

நான் த.வெ.க.வில் இருந்து விலகிய பிறகு என் மீது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியான அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனது புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவுகளை வெளியிடுகின்றனர், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம் மிரட்டல்கள் விடுகின்றனர்.

இதற்கான ஆதாரங்களுடன் நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். இந்த பதிவுகளை வெளியிடுபவர்கள் அனைவரும் த.வெ.க.வின் விர்ச்சுவல் வாரியர்ஸ் குழுவை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் தங்கள் முகப்பு பக்கங்களில் விஜய்யின் புகைப்படம், த.வெ.க. கொடி ஆகியவற்றை வைத்துள்ளனர்.

த.வெ.க.வின் இணையவழிப் போராளிகளால் செய்யப்படும் இந்த ஆன்லைன் துன்புறுத்தலை தடுக்க கட்சியின் தலைவர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக பெண் உறுப்பினர்கள் த.வெ.க.வை விட்டு விலக அஞ்சுகிறார்கள்.

தனது கட்சியை விட்டு விலகும் பெண்கள் மீது நடத்தப்படும் ஆன்லைன் தாக்குதல்களுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும். தமிழகப் பெண்கள் ஒரு பொறுப்பற்ற தலைவரை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.”

இவ்வாறு ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.