சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து கட்சியின் உள்கட்டமைப்பு பலப்படுத்துதல். புதிய உறுப்பினர் சேர்க்கை கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களை விஜய் அறிவித்தார். தொடர்ந்து கட்சியின் முதல் தலைமையில் மாநில மாநாடு விஜய் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடந்தது. மாநாட்டில் லட்சக் கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.
இதனால் விக்கிரவாண்டி மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக ஒட்டு மொத்த அரசியல் கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்தது. 2-வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. தென் மாவட்டத்தில் நடந்த இந்த மாநாடு அரசியல் கட்சிகளை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் உற்று நோக்க வைத்தது. மாநாட்டில் விஜய்யின் அதிரடி பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கட்சி தொடங்கிய பின்னர் சந்திக்க இருக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பல்வேறு வியூகங்கள் அமைத்து விஜய் செயல்படுத்த தொடங்கினார். இதுகுறித்து பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வந்த விஜய் அடுத்த கட்டமாக தேர்தல் சுற்றுப்ப யணத்தை அறிவித்தார். முதற்கட்ட சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கிய விஜய் அடுத்ததாக அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக பிரசாரம் செய்தார். அவர் பிரசாரம் சென்ற இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.
மேலும் 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து முதல் கட்ட பூத் கமிட்டி மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தினார். இது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலியும் கட்சி சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கட்சி நிர்வாகிகள் பணிகளை விஜய் நேரடியாக கண்காணித்து வருகிறார். தொடர்ந்து சமீபத்தில் கட்சியின் முதல் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்ல புரத்தில் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து பேசினார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் புதிதாக த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க விழா நாளை காலை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. ஆண்டு விழாவையொட்டி கட்சி அலுவலக வளாகத்தில் விஜய் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். அடுத்ததாக பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் பேச இருக்கின்றனர். அடுத்ததாக கட்சி தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார்.
அப்போது 2026 தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் சென்னை (தெ) வடக்கு மாவட்ட செயலாளர் தி.நகர் க.அப்புனு, சென்னை மத்திய மாவட்ட செயலாளர் பூக்கடை எஸ்.கே.எம்.குமார், சென்னை (தெ) தெற்கு மாவட்ட செயலாளர் விஜய் கே.வி.தாமு, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன். வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கட் பீஸ் கே.விஜய், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இ.சி.ஆர்.பி. சரவணன், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சிவா, சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் எம். டி.சி.என்.கணிகா, வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேலு, சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் சபரிநாதன் பங்கேற்க இருக்கின்றனர். விழா முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட உள்ளது.