தமிழக செய்திகள்

தவெக ஆட்சி துன்பம் மிகுந்த ஆட்சி - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அவசர கோலத்தில் திறமையற்ற அரசாங்கமாக தவெக அரசு செயல்பட்டு வருகிறது.

திருப்பூர்,

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தால் 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், தவெக ஆட்சியில் ஊழல், போதைப்பொருள் விற்பனை மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் மூலம் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றியது. இதற்காக விவசாயிகள் தாமாக முன்வந்து எனக்கு பாராட்டு விழா நடத்தினர்.

மின் கொள்முதலில் ஊழல்

எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட மின் ஒப்பந்தங்களை தவெக அரசு ரத்து செய்துள்ளது. தவெக அரசின் மின் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.40-க்கு கொள்முதல் செய்யப்பட்டால், அதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

திட்டமிடாமல், அவசர கோலத்தில் திறமையற்ற அரசாங்கமாக தவெக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. மேலும், கடன் மேல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தவெக ஆட்சி அனைவருக்கும் துன்பம் மிகுந்த ஆட்சியாக உள்ளது.

467 தொழிற்சாலைகள் மூடல்

கோவையில் பெரியார் அறிவுலகத்தை தவெக அரசு அவசர அவசரமாக திறந்து வைத்துள்ளது. ஆனால், அதில் உள்ள புத்தகங்களை ஏன் ஆய்வு செய்யவில்லை? இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதற்காக ஜெர்மனிக்கு சென்று ஒப்பந்தம் போட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒரே நாளில் 8 கொலைகள்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்துப் பேசிய அவர், நேற்று ஒரே நாளில் மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளன. தவெக ஆட்சி அமைந்த பிறகு போதைப்பொருள் விற்பனை காரணமாக 100-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. தவெகவை சேர்ந்தவர்களே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் செய்தியாளர்களை சந்திப்பதில்லை. செய்தியாளர்களை சந்தித்துப் பேசினால்தான் நாட்டில் என்ன நடக்கிறது என்பது முதலமைச்சருக்கு தெரியவரும் என்றும் விமர்சித்தார்.

காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை

தேனியில் போதைப்பொருள் கும்பல் தாக்குதலில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தவெக ஆட்சியில் காவல்துறையினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. உண்மையான செய்திகளை வெளியிட்டால் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

SCROLL FOR NEXT