சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றது. 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக , கம்யூனிஸ்ட்கள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதில், கம்யூனிஸ்டுகள் கட்சிகள் தவிர இதர கட்சிகள் விஜய்யின் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளன. தவெக ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்யத்தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், சென்னை அம்பத்தூரில் கருணாநிதியின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி டிஆர் பாலு, தவெக ஆட்சி நீடிக்காது என்றார். இது குறித்து அவர் கூறியதாவது: நம்முடைய நண்பர்கள் கலங்காமல் இருக்க வேண்டும். நீங்கள் பலருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு முன்பாக நான் இதே போல் வந்து பேசும் போது எங்கு பார்த்தாலும் சிரிப்பொலி. இன்று சோகத்தின் உருவமாக நீங்கள் இருக்க வேண்டிய தேவை இல்லை. நம்மை ஆளுவதற்கு, வழி நடத்துவதற்கு மு.க. ஸ்டாலின் இருக்கிறார்.
அவருடைய தலைமையில் தொடர்ந்து போரிடுவதற்கு நாம் தயாராக வேண்டும். எதிரிகளை சாய்ப்பதற்கு ஒவ்வொருவரும் தயாராக வேண்டும். விரைவில் இந்த நிலை மாறும். இந்த ஆட்சி நீடிக்காது என்பதை சொல்லிக் கொள்கிறேன். இந்த ஆட்சி நீடிக்காமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. பொது மேடையில் விவாதிக்க கூடிய விஷயம் அதுவல்ல. தனியாக வந்து கேட்டால் என்னால் சொல்ல முடியும். நம்முடைய நண்பர்கள் தனியாக வந்து கேளுங்கள் சொல்கிறேன். நீங்கள் திருப்தி அடைகின்ற, மகிழ்கின்ற வகையில் பல செய்திகள் காத்து இருக்கின்றன என்பதை சொல்லி நம்முடைய தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சி தொடரும். அதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது” என்றார்.