தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் வீடு, கோவில்களில் நகை, விளக்கு திருட்டு: 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பட்டன்விளை பத்திரகாளி அம்மன் கோவில், கண்ணாட்டுவிளை சிவசக்தி கோவில் ஆகியவற்றில் பித்தளை விளக்குகள், பூஜை பாத்திரங்கள் திருடப்பட்டன.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பட்டன்விளை பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் கண்ணாட்டுவிளை சிவசக்தி கோவில் ஆகியவற்றில் பித்தளை விளக்குகள் மற்றும் பூஜை பாத்திரங்கள் திருடப்பட்டன. மேலும், திங்கள்நகர் பகுதியில் தமிழ்செல்வி என்பவரது வீட்டில் ஒரு சவரன் தங்க நகை திருடு போனது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இரணியல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அழகன்பாறை பகுதியை சேர்ந்த டேவிட்ராஜ் (வயது 27) என்பவர் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், டேவிட்ராஜ் திருடிய நகையை ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார்(48) என்பவரிடம் கொடுத்து, தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தது தெரியவந்தது. அவரிடமிருந்த நகை மற்றும் கோவில்களில் திருடப்பட்ட பித்தளை பொருட்களை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட டேவிட்ராஜ், ஆனந்தகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.